வாரணாசியில் ரூ.450 கோடியில் புதிய கிரிக்கெட் மைதானம் – பிரதமர் மோடி அடிக்கல்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். வாரணாசியின் கஞ்சரியில் சுமார் ரூ.450 கோடி செலவில் 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நவீன சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது :
வாரணாசிக்கு மீண்டும் வருகை தரும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இந்த நகரத்தின் மகிழ்ச்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் சந்திரயான் நிலவில் தரையிறங்கி சிவ சக்தி புள்ளியை கடந்த மாதம் 23 ஆம் தேதி அடைந்தது.
சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, தான் காசிக்கு விஜயம் செய்வதாக பிரதமர் எடுத்துரைத்தார். “சிவ சக்தியின் ஒரு இடம் சந்திரனில் உள்ளது, மற்றொன்று காசியில் உள்ளது” என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முக்கியமான சாதனைக்காக அனைவரையும் வாழ்த்தினார்.
மாதா விந்தியவாசினிக்குச் செல்லும் பாதையின் சந்திப்பில் அமைந்துள்ள இந்த இடத்தின் முக்கியத்துவத்தையும், ராஜ் நாராயண் அவர்கள் வாழ்ந்த இடமான மோதிகோட் கிராமத்துடனான அதன்நெருக்கத்தையும் பிரதமர் குறிப்பிட்டார்.
மகாதேவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச அரங்கத்தின் வடிவமைப்பு காசி மக்கள் மத்தியில் ஒரு பெருமித உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இங்க கட்டமைக்கப்பட உள்ள மைதானம் சிறந்த கிரிக்கெட் போட்டிகளைக் காணும் என்றும், இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச தரத்துடன் கூடிய மைதானத்தில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். “இது காசி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்”, என்றும் அவர் கூறினார்.
