இந்தியா

இதுவரை 23 லட்சம் விண்ணப்பங்கள்… ஜனவரி -5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் போன்றவற்றிற்காக இதுவரை 23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த நவ. 9-ம் தேதி தொடங்கியது. அன்று வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது, 6,18,26,182 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,03,95,103 ஆண் வாக்காளர்களும், 3,14,23,321 பெண்கள் வாக்காளர்கள் மற்றும் 7,758 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான பணிகளுக்கு நேரிலும், இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர, கடந்த நவ, 12,13 மற்றும் 26, 27 ஆகிய நான்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. கடந்த டிசம்பர் 8ம் தேதியுடன் இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 23 லட்சத்து 03 ஆயிரத்து 310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயரை சேர்க்க 7,57,341 விண்ணப்பங்களும், பெயர்நீக்கத்துக்கு 6,05,062 விண்ணப்பங்களும் உட்பட 17,02,689 விண்ணப்பங்களும், திருத்தம் செய்ய 4,78,726 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கள ஆய்வு மூலம் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தத்துக்காக www.nvsp.in,https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் “VOTER HELP LINE” கைபேசி செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னரே புதிதாக பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.