நல்ல சக்திகள் ஒன்றிணையும் போது தீய சக்திகளால் செயல்பட முடியாது – பிரதமர் மோடி
நல்ல சக்திகள் ஒன்றிணையும் போது குற்றச் சக்திகளால் செயல்பட முடியாது என டெல்லியில் இன்டர்போல் மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசினார்.
195 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் 90வது இன்டர்போல் 4 நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி இன்று பிற்பகல் டெல்லியில் தொடங்கி வைத்தார். 1997ம் ஆண்டு இந்தியா இன்டர்போல் மாநாடு நடத்திய நிலையில் 25வருடங்களுக்கு பிறகு இந்தியா இந்தாண்டு இன்டர்போல் மாநாட்டை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், இது இந்திய மக்களின் கலாச்சாரம் மற்றும் ஒற்றுமைக்கான கொண்டாட்டம் என்றார். உலகெங்கிலும் உள்ள காவல்துறை மக்களவை பாதுகாப்பது மட்டுமல்லால் சமூக நலனையும் மேம்படுத்துகிறது. எந்த ஒரு நெருக்கடியின் போதும் காவல்துறை முன்னின்று பணி செய்வார்கள்;மக்கள் சேவையில் அதிக தியாகம் செய்யும் காவலர்களுக்கு தனது மரியாதை செலுத்துவதாக கூறினார்.
போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், வேட்டையாடுதல் மற்றும் பிற அச்சுறுத்தல்களுக்கு எதிராக உலகம் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. இந்த அச்சுறுத்தல்கள் குறைக்கப்படுவதை உறுதிசெய்ய, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்புகளின் தேவை என்றார். மேலும், நல்ல சக்திகள் ஒன்றிணைந்து ஒத்துழைக்கும் போது குற்றச் சக்திகளால் செயல்பட முடியாது என்றார். குறிப்பாக, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு எதிராக போராட வேண்டும் என அனைத்து நாட்டு உறுப்பினர்களிடம் அழைப்பு விடுத்தார்.
