விளையாட்டு

இறுதி வரை போராடி வீழ்ந்தது லக்னோ..! 2-வது தகுதி சுற்றுக்குள் மாஸாக நுழைந்தது பெங்களூரு அணி…

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று போட்டியில் தொடரின் அறிமுக அணியான லக்னோ அணி , பெங்களூரு அணியை எதிர்கொண்டது .

இதில் பெங்களூரு அணிக்கு எகிரக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அணியின் தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ் மற்றும் கிங் கோலி களமிறங்கினர்.

நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டு பிளெசிஸ் மொஹ்சின் கான் வீசிய பந்தில் டக் அவுட்டாகி வந்த வழி சென்றார் . அவரை தொடர்ந்து ரஜத் படிதார் களமிறங்கினார்.

மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த பக்கம் ரஜத் படிதார் அரைசதம் கடந்து அசத்த மேக்ஸ்வெல் 9 ரன்களில் பெவிலியன் நோக்கி சென்றார் .

இதையடுத்து ரஜத் படிதார் உடன் ஜோடி சேர்ந்தார் அதிரடி மன்னன் தினேஷ் கார்த்திக். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர் . அதிலும் குறிப்பாக ரவி பிஷ்னாய் வீசிய 16-வது ஓவரில் ரஜத் படிதார் 26 ரன்கள் குவித்தார்.

பரபரப்பான கட்டத்தில் தொடர்ந்து அதிரடிக்காட்டிய படிதார் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 80 ரன்களுக்கு மேல் குவித்தது.

இறுதியில் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. படித்தார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி விளையாடியது .

இமாலய இலக்கை விரட்ட நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெரிய அதிர்ச்சியை கொடுத்துவிட்டு சென்றார் .

அவரை தொடர்ந்து வந்த மனன் வோரா 19 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் கேப்டன் ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கேப்டன் ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். மற்றொரு முனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் தீபக் ஹூடா 26 பந்துகளில் 45 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தெடர்ந்து மார்கஸ் ஸ்டோனிஸ் களமிறங்கினார். ஹர்ஷல் பட்டேல் வீசிய 18-வது ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் 9 ரன்களில் அவுட்டானார். கடைசி இரண்டு ஓவரில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லீவிஸ் மற்றும் ராகுல் களத்தில் இருந்தனர்.

19-வது ஓவரை வீசிய ஹேசில்வுட் 4-வது பந்தில் ராகுலை தட்டிதூக்கினார் . சிறப்பான பங்களிப்பை அளித்த ராகுல் 58 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஆல்ரவுண்டர் குருனால் பாண்டியா டக் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் லக்னோ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. ஆமதாபாத்தில் வரும் 27-ஆம் தேதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது . அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.