IPL 2022 : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி..!
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின .
இதில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அணியின் தொடக்க வீரர்களாக அனுஜ் ராவத் டூ பிளேசிஸ் களமிறங்கினர்.
அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அனுஜ் ராவத் 4 ரன்களில் சமீரா பந்துவீச்சில் வெளியேற அடுத்த பந்திலே விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் தீபக் ஹூடா-விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் .
பின்னர் டூ பிளேசிஸ் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து சிறிது அதிரடி காட்டினார். ஆனால் அவரும் வெகு நேரம் நீடிக்கவில்லை. 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார் .
அவரை தொடர்ந்து வந்த சூர்யா பிரபுதேசாய் குருனால் பாண்டியா பந்துவீச்சில் 10 ரன்களில் வெளியேறினார்.
இருப்பினும் ஒரு முனையில் கேப்டன் டு பிளேசிஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய டு பிளேசிஸ் 96 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் விக்கெட் ஆனார் .
பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது .
இலக்கை எட்ட நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட டி காக் 3 ரன்களில் வெளியேற அவரை தொடர்ந்து வந்த மனிஷ் பாண்டே 6 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் வெளியேறினார்.
கேப்டன் ராகுல் 30 ரன்களில் பெவிலியன் திரும்ப ஆல்ரவுண்டர் குருனால் பாண்டியா அதிரடியாக விளையாடி 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஏற்றுக்கொண்டது .
இதனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மேலும் பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹேசில்வுட் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
