லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி…
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டி DY Patil மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இந்த ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின .
இதில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர் .
அதன்படி தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் பெவிலியன் சென்றார் . அதை தொடர்ந்து வந்த லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் சுந்தர் சூழலில் வீழ்ந்தார் .
அனுபவ வீரர் மனிஷ் பாண்டே அலட்சிய ஆட்டத்தால் 11 ரன்களில் வெளியேற ஒரு கட்டத்தில் லக்னோ அணி 68 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
தொடக்க வீராக களமிறங்கி நிலைத்து நின்று விளையாடி வந்த கேப்டன் ராகுல் , தீபக் ஹூடா ஜோடி அணியை சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர் .
ஆனால் தீபக் ஹூடா 51 ரன்னிலும் கேப்டன் ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி ஓவரில் இளம் வீரர் ஆயுஷ் படோனி – ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடி காட்ட லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது .
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது.
தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் வீழ்ந்தார் . பிறகு அபிஷேக் சர்மா – ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர்.
அபிஷேக் சர்மா 13 ரன்களில் வெளியேற ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்து க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் பெவிலியன் சென்றார் .
மார்க்ரம் வந்த வேகத்தில் 12 ரன்களில் க்ருனால் சுழலில் சிக்கினார். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் – நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடி வந்த பூரன் 34 ரன்களில் அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வி அடைந்தது . இதன் மூலம் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
