தமிழ்நாடு

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி தந்த தமிழக அரசு..! அச்சம் கலந்த ஆனந்தத்தில் புத்தக பிரியர்கள்..!

ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.

அந்த வகையில் நடப்பாண்டில் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்படுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், புத்தகக்காட்சி வேறு வழியின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில், கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், புத்தக கண்காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை புத்தகக்காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.