அரசியல்தமிழ்நாடு

அதிமுகவை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை..! பாமகவுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்திருப்பது, அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்றும் பாதிப்பு பாமகவுக்கு தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.எங்கள் கட்சியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வரும் 22ம் தேதிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாமக உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவித்திருப்பதோடு தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பாமக தனித்து போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “ தனித்து போட்டியிடுவதால் பாமகவுக்குதான் இழப்பு. அதிமுகவுக்கு இழப்பில்லை. எங்கள் கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால், எங்கள் கட்சியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலை தொடர்ந்தால் நாங்களும் விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும். எழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து முடிவுகளை எடுத்திருக்கலாம். அது அவர்கள் விருப்பம். அதனை நான் விமர்சிக்கவில்லை. எங்கள் கட்சியை பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதியில்லை என தெரிவித்தார் .