“2026-க்கு முன்னரே தேர்தல் வரும்… அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்”… செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு…
வெடிகுண்டு என நினைத்து திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை புஷ்வாணமாகிவிட்டது என்றும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தும் சோதனைக்கு, பழிவாங்கும் நோக்கோடு, திமுக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், இது கண்டிக்கதக்கது என்றும் அதிமுக தரப்பு தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய செல்லூர் ராஜூ, வெடிகுண்டு என நினைத்து வெளியிட்ட வெள்ளை அறிக்கை புஷ்வாணமாகிவிட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை கருணாநிதியாலேயே ஒன்றும் செய்யமுடியவில்லை என்றும், நிதியமைச்சர் தன்னுடைய விளம்பரத்திற்காக வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருப்பதாக கூறினார். வெடிகுண்டு என நினைத்து வெளியிட்ட வெள்ளை அறிக்கை, புஸ்வாணம் ஆகிவிட்டது. அதிமுக காலத்தில் திமுகவினர் தங்களது கரை வேட்டிகளை பெட்டியில் வைத்து பூட்டி விட்டார்கள். 2026 ஆம் ஆண்டுக்கு முன்னரே தேர்தல் வரக் கூடும் என்றும் அப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும் செல்லூர் ராஜூ பேசினார்.
