பழிவாங்கும் நடவடிக்கையை திமுக கைவிட வேண்டும்… கே.டி.ராகவன் வலியுறுத்தல்…
அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தற்போது எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்களைக் குறி வைத்து திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்றம், மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் அதிமுக தலைமை கூறியுள்ளது.
அதிமுகவுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக அரசு சோதனைகளை ஏவிவிடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில், அதிமுக முழுமையாக வெற்றி பெற்றதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார். அதேபோல் ஆன்லைனில் டெண்டர் விடுவதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
புகார்களின் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்படுவதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோதனை நடத்தப்படுவதில்லை என்றும் திமுகவினர் கூறியுள்ளனர். இந்த நிலையல், தமிழக பாஜக செயலாளர் கே.டி.ராகவன், அதிமுகவினரை பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவது அரசியலில் பழிவாங்கம் நோக்கமாக தெரிவதாகவும் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.
