தமிழ்நாடு

“ஆத்தாவுக்கே இந்த நிலையா?” கோயில்களைத் திறக்க கோரி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு…!

ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் கோயில்களை திறக்கக்கோரி பெண் ஒருவர் சாணி பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் அவிநாசி சாலையில் அமைந்துள்ள தண்டுமாரியம்மன் கோயில் முன்பு கடந்த சில மாதங்களாக பூ விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், தான் கொண்டு வந்த சானி பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது, ஆடிமாதம் வெள்ளிக்கிழமைகளில் தண்டுமாரியம்மன் கோயில், கோனியம்மன் கோயில்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று கூறி போலீசாரின் கால்களில் விழுந்து கதறினார். ஆடி மாதம் உற்சவம் நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் கோயில்களைப் பூட்டினால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், ஆத்தாவுக்கே இந்த நிலையா? என கூச்சலிட்டார்.

பின்னர் விஜயாவை சமாதானப்படுத்திய போலீசார், அவரை, பந்தய சாலை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். கோயில்களை திறக்கக்கோரி, சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.