சினிமா

அனுமதியின்றி படப்பிடிப்பு… நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு குழுவினருக்கு அபராதம்…

கொரோனா விதிகளை மீறி அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் பட குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

கோவை நகர பகுதியில் 100 அடி வீதி, துடியலூர் சந்திப்பு, கிராஸ் கட் சாலை, புரூக்பீல்டு மால் ஆகிய 4 பகுதிகளில் இருக்கும் 9 டாஸ்மாக் கடைகளை மூட கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தவிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி கடைகளைத் தவிர பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் சினிம படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பை காண்பதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. படக்குழுவினர் மீது 19,400 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.