“மருத்துவர்களைத்தான் கடவுளாக காண்கிறேன்”… உதயநிதி ஸ்டாலின் சொன்ன காரணம் என்ன?
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது ஆனால், சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட தீ விபத்தின்போது விரைந்து செயல்பட்டு குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர்களைத்தான் நான் கடவுளாக பார்ப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3-வது நினைவு தினத்தை முன்னிட்டு, 90 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை மையம் புதுப்பிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 2010 ஆம் ஆண்டு நற்பணி மன்றமாக துவங்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது மிகவும் பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். இந்த மருத்துவமனையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் துரிதமாக செயல்பட்டு எந்தவித பாதிப்பில் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார். தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்ற உதயந்தி, தீ விபத்தின்போது குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர்களைத்தான் கடவுளாக பார்ப்பதாக கூறினார்.
திமுக அரசு, கொரோனா தொற்றின் இரண்டாம் தாக்கத்தை சிறப்பாக கையாண்டு மக்கள் சேவை செய்து வருவதாக கூறினார். தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டள்ள தொகுதியாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி விளங்குகிறது என்றும், இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பெருமை கொள்வதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
