இந்தியா

பெண்ணை உதைத்து கீழே தள்ளிய ஆட்டோ ஓட்டுநர்… போலீசார் விசாரணை…

ஆந்திராவில், வட்டிக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண் ஒருவரை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உதைத்து கீழே தள்ளிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள மங்களகிரியைச் சேர்ந்தவர் கோவர்த்தனி. அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான கோபிகிருஷ்ணாவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேறு ஒருவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து இரண்டாண்டுகள் கடந்த பின்னும், ஆட்டோ டிரைவர் கோபிகிருஷ்ணா வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை. அதற்குண்டான வட்டியும் செலுத்தவில்லை. இதனால், கொடுத்த பணம் மற்றும் வட்டி பணத்தை கோவர்த்தினி திரும்ப கேட்டுள்ளார்.

சாலையில் நின்று கொண்டிருந்த பெண் கோவர்த்தினி, ஆட்டோ ஓட்டினரிடம் பணம் திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர், கோவர்த்தினி வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில் அந்த பெண், சாலையில் புரண்டபடி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கோவர்த்தினி, போலீசிடம் புகார் அளித்ததை அடுத்து, வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கோபிகிருஷ்ணா தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.