இந்தியா

“அரசியலுக்காக அண்ணாமலை போராட்டம் நடத்துகிறார்”… கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேச்சு…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியலுக்காக உண்ணாவிரதம் இருப்பதாகவும், மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று உறுதியாக கூறி வருகிறார். கர்நாடக அரசின் அணை கட்டும் நடவடிக்கைக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிரதமர் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரிடம் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், ஓரணியில் திரண்டுள்ள நிலையில், கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக சார்பில், கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்பப் தெரிவித்து தமிழக பாஜகவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சையில் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, யார் எதிர்த்தாலும் எங்களுக்கு அதுகுறித்து சிறு கவலையும் இல்லை என்று, விரைவில் உரிய அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டி முடிப்போம் என்று கூறியுள்ளார்.