அதிமுக அவை தலைவர் மதுசூதனன் காலமானார்…
அதிமுக அவை தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுசூதனனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
2007 ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவராக மதுசூதனன் இருந்து வந்தார். 2017 ஆம் ஆண்டு அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நின்றவர். மதுசூதனன் இருக்கும்வரை அதிமுகவின் அவைத் தலைவர் என ஜெயலலிதா அறிவித்தது கடைசிவரை பின்பற்றப்பட்டது.
