ரூ.10-க்கு கலைஞர் குடிநீர் பாட்டில்… அம்மா குடிநீருக்கு மாற்றா என மக்கள் சந்தேகம்…
அம்மா குடிநீர் திட்டம் மூலம் 10 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்த நிலையில், மதுரையில் 10 ரூபாய்க்கு குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அம்மா குடிநீருக்கு மாற்றா? என பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
பேருந்து போக்குவரத்து பயணத்தின்போது குறைந்த விலையில் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கில், 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அம்மா குடிநீர் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது அம்மா குடிநீர் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக அம்மா குடிநிர் உற்பத்தி நிலையம், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மா குடிநீர் உற்பத்தி ஆலையும் மூடப்பட்டது. விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன.
இந்த நிலையில், கலைஞர் குடிநீர் திட்டம் என்ற பெயரில் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில், மதுரையில் சில கடைகளில் கலைஞர் குடிநீர் பெயரில் 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
