குற்றம்

குளிர்பானம் அருந்திய சிறுமி உயிரிழப்பு… உறவினர்கள புகார்…

சென்னையில் குளிர்பானம் அருந்திய சிறுமி மூக்கில் ரத்தம் கசிந்து, உடல் நீல நிறமாக மாறி இறந்ததாக அவரது உறவினர்கள், போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ் – காயத்ரி தம்பதியரின் 13 வயது மகள் தரணி என்பவர், குளிர்பானம் வாங்குவதற்காக அருகில் உள்ள மணி என்பவரின் கடைக்கு சென்று 10ரூபாய்க்கு குளிர்பானம் ஒன்றையும், ரஸ்னா பாக்கெட் ஒன்றையும் வாங்கியுள்ளார். இந்த இரண்டு குளிர்பானங்களையும் குடித்த அவருக்கு சிறிது நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாந்தியும் எடுத்துள்ளார்.

இதை அறிந்த அவரது சகோதரி, தாயை வீட்டிற்கு வரவழைத்த நிலையில், தரணி மயங்கிய நிலையில், அருகில் உள்ள மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சிறுமியின் உடல் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ளது.

இந்த தகவல் அறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு, ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமி உட்கொண்ட குளிர்பான பாட்டிலை, ஆய்வுக்காக சேகரித்தனர். சிறுமி உயிரிழந்ததற்கான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சிறுமி குளிர்பானம் வாங்கிய கடை உரிமையாளரிடம் இது குறித்து அவரது உறவினர்கள் கேட்டபோது, கடை உரிமையாளர் மணி அலட்சியமாக பதிலளித்துள்ளார். மேலும், அவரது கடையில் காலாவதியான பொருட்கள் மற்றம் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும் சிறுமியின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கடையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் உயிரிழப்புக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.