விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி : அர்ஜெண்டினா அணியிடம் போராடி தோற்றது இந்திய அணி..!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில்
பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தங்கள் ஹாக்கி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை இந்திய மகளிர் ஹாக்கி அணி பதிவு செய்தது.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய அதே உத்வேகத்துடன் இன்று அர்ஜெண்டினாவுடன் அரையிறுதிப்போட்டியில் விளையாடியது இந்திய மகளிர் ஹாக்கி அணி. அர்ஜெண்டினா மகளிர் அணி ஜெர்மனியை 3-0 என்று வெளியேற்றி கடும் பலத்துடன் இருந்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியின்போது, இந்திய அணியின் குர்ஜித் கவுர் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோலை அடித்தார். அதேநேரத்தில் அர்ஜென்டினா வீரர் மரியா நோயல் இரண்டு பெனால்டி வாய்ப்பை கோலாக அடித்தார். அதன்மூலம், அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வியின் மூலம், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் இறுதிப் போட்டிக்கான கனவு தகர்ந்தது. இருப்பினும், இந்திய அணிக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணியுடன் அடுத்து நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கம் உறுதியாகும் .

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடன் அடுத்து நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்துமா என்பதை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் .