Uncategorized

கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நானே அழைத்தும் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை… அமைச்சர் துரைமுருகன் பேட்டி…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தும் அவர் விழாவில் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா நேற்று குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். விழாவை புறக்கணிக்கப்போவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற நிலையில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் விழாவில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்கு முறைப்படி அழைக்காததாலேயே திமுக பங்கேற்கவில்லை என்றும், அதிமுக தரப்பில் அழைப்பிதழ் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நானே அழைத்தும் அவர் விழாவில் பங்கேற்கவில்லை என்றார்.

கருணாநிதி திறப்பு விழா கொண்டாட வேண்டும் என திட்டமிட்டபோதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னிடம் எதிர்கட்சியினர் தோழமையுடனும், அனுசரிப்புடனும் விழா நடைபெற வேண்டும் என்றும், குடியரசு தலைவர், ஆளுநர், முதலமைச்சர் அமரும் வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் ஒதுக்கப்பட்டு அவர் வாழ்த்துரைப்பதற்கு வாய்ப்பு தரப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்பு கொண்டேன். தான் விழாவில் கலந்து கொள்வது குறித்து பிறகு சொல்வதாக கூறிய அவர், சட்டப்பேரவை செயலாளரிடம் தான் பங்கேற்க போவதில்லை என்பதை தெரிவித்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.