“சட்டமன்ற நூற்றாண்டு விழா” வரலாற்றை மாற்றும் செயல்… கருணாநிதி படத்திறப்பு விழவை புறக்கணிப்பதாக ஜெயக்குமார் பேட்டி…
சட்டப்பேரவையில் நடக்கும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டமன்ற வரலாற்றை மாற்றி அமைத்துவிட்டு திமுக விழா கொண்டாடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று, படத்தை திறந்து வைக்க உள்ளார். குடியரசு தலைவரின் வருகையையொட்டி, சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளது என்றும், நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது வரலாற்றை மாற்றும் செயல் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இது தொடர்பாக ஜெயக்குமார் சில கேள்விகளை முன் வைத்தார். 1937 ஆம் ஆண்டை கணக்கிட்டுதான் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் பொன்விழா கொண்டாடப்பட்டது என்றும், அப்படிப் பார்த்தால் 2037 ஆம் ஆண்டில்தான் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். தற்போதைய நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் முரண்பாடு இருப்பதாகவும் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் நடக்கும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்தார். சட்டமன்ற வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுவதாகவும், சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வர முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
