அரசியல்தமிழ்நாடு

சட்டமன்றத்தில் கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு…!

சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவும் இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில் நடைபெறும் விழாவில், கருணாநிதியின் படத்தை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறக்க உள்ளார்.

சட்டமன்ற நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழாவை முன்னிட்டு, புனித ஜார்ஜ் கோட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலக வளாகம் முழுவதும் கமாண்டோ படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சபாநாயகர்கள், சட்டமன்றத்தில் உள்ள கட்சி தலைவர்க, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் உள்பட சில உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற வரலாற்றை மாற்றி அமைத்துவிட்டு திமுக விழா கொண்டாடுவதாகவும் விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.