“உங்கள் விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!” எம்.பி. தயாநிதி மாறனுக்கு பதிலடி தந்த அண்ணாமலை…!
மேகதாது அணை குறித்த திமுக எம்.பி.தயாநிதி மாறன் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு பிடிவாதமாக உள்ள நிலையில், அணை கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தமிழகம் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. காவிரியில் தங்களுக்கு உரிமை உள்ளது, நாங்கள் அணை கட்டுவோம் என்று தொடர்ந்து கர்நாடகம் பிடிவாதமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடக அரசின் போக்கை கண்டித்து வரும் 5 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அண்ணாமலையின் அறிவிப்புக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உண்ணாவிரதப் போராட்டம் இருந்தாலும் அது பற்றி கவலைப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இதனிடையே, திமுக எம்.பி. தயாநிதி மாறன், மேகதாது விவகாரத்தில் சுமூக தீர்வுகாண மாவீரன் அண்ணாமலையை தூதராக அனுப்புவோம் என்று தெரிவித்திருந்தார். எம்.பி. தயாநிதி மாறனின் கருத்துக்கு, அண்ணாமலை டுவிட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று பதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது டி 20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தவர் தயாநிதி மாறன் என்றும், தற்போது மேகதாது அணை பற்றி கவலைப்பட்டதற்கு நன்றி கூறியுள்ளார்.
மேலும், உங்களின் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால், நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக் கொண்டு கர்நாடகாவிற்கு தூது செல்ல தயார் என்றும், இதை அவர் மாமா மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்.பி. தயாநிதிமாறனின் கருத்துக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
