கேரளாவில் இருந்து தமிழகம் வர ‘ஆர்டிபிசிஆர்’ கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள், கட்டாயம் ஆர்டிபிசிஆர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா 3-வது அலை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தில் 3-வது அலை பரவால் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம், காமராஜர் உள்நாட்டு விமான முனையம் ஆகியவற்றில் இருந்து வரும பயணிளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என்றார். அவ்வாறு ஆர்டிபிசிஆர் இல்லை என்றால், கேரளாவில் இருந்து வருபவர்கள் இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினால் தமிழகத்திற்குள் வரலாம்.
விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் கொரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாகிறது. கொரோனா 3-வது அலை முன்னதாக வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளதாக கூறினார். தேவையின்றி அண்டை மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
