அரசியல்தமிழ்நாடு

போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… அரசுக்கு கமல் ஹாசன் கோரிக்கை…

அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள்எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வெளியிட்டள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்றும், நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்டகாலமாக போராடி வரும் பணியாளர்களுக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அனைத்து காலி பணியிடங்களையும் நேர்மையாக தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பணியிட மாற்றம், பதவி உயர்வு, ஓவர் டியூட்டி என அனைத்திலும் நீடிக்கும் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பஞ்சப்படியை உடனடியாக வழங்கவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக ஆட்சி, போக்குவரத்து தொழிலாளர்களின் பொற்காலமாக அமையும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருந்ததை செயலில் காட்டும் வகையில் நடைபெறவிருக்கும் பட்ஜெட் மற்றும் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரில் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் ம.நீ.ம. தலைவர் கமல் ஹாசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.