துக்ளக் விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்த நடிகை கஸ்தூரி…
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் கொள்கை உள்ளிட்ட இடங்க்ளில் அகழாய்வு நடந்து வருகிறது. இதன் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தது என தெரியவந்தது. கீழடியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கீழடி அகழாய்வு பணி குறித்து துக்ளக் பத்திரிகையில் விமர்சனம் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துக்ளக் பத்திரிகையில் வெளியான விமர்சனம் குறித்து, அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, அகழாய்வு தேவையற்றது என்று சில வேலையற்றவர்கள் எழுதுவது பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் என்றும், பேரறிஞர் அண்ணா கூறியதைப்போல தமிழ் நாகரிக பண்பாட்டு தீ அகிலமெல்லாம் பரவட்டும். நம் பெருமைகளை உரத்து சொல்வதில் பெருமையடைகிறோம் என்று அமைச்சர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், துக்ளக் பத்திரிகைக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், பத்திரிகையாளர் குருமூர்த்தி இந்த கட்டுரையின் பின்னணி என்ன? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சி நேரத்தை வீணடிப்பதாக கூறுகிறீர். இதனால் சாதாரண மனிதனுக்கு எந்த பயனும் இல்லை என்று சொல்கிறீர்கள் என்றால் ராமர் கோயில் கட்டுவதாலும், குஜராத்தின் ஒற்றுமை சிலையாலும் இந்தியாவின் பிரச்சனை தீருமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
