Uncategorized

பினராயி விஜயன் ஆட்சியில் மதம் சார்ந்த முறைகேடுகள் அதிகரிப்பு… காங். செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் குற்றச்சாட்டு…

பினராயி விஜயன் ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளின் மதம் சார்ந்த முறைகேடுகள் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கத்தோலிக்கர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு இலவச அறிவிப்புகளை கத்தோலிக்க ஆலயத்தின் ஆயர் அறிவித்துள்ளார்.

கேரளாவில், 5 குழந்தைகளுக்குமேல் பெற்றால் மாதம் 1500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்றும், இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கை, அனைத்து ஆலயங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பாலா மறைமாவட்ட குடும்பநல இயக்க பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் இது குறித்து பேசும்போது, கேரளாவில் கத்தோலிக்கர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே இலவசம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் 18.38 சதவிகிதமாக இருந்த கத்தோலிக்கர்கள் தற்போது 14 சதவிகிதம் மட்டுமே உள்ளனர் என்றும் இதனால் கத்தோலிக்கர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கப்படுவதாக பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் கூறியிருந்தார். மலபார் கத்தோலிக்க ஆலய மறைமாவட்ட ஆயரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணனிடம், கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி காலத்தில், கிறிஸ்துவ மிஷனரிகளின் மதம் சார்ந்த முறைகேடுகள் அதிகரித்து விட்டன என சொல்லத் தோன்றும் வகையில் உள்ளதாக கூறினார்.