அரசியல்தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி எதிர்பாராது நடந்தது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி எதிர்பாராதது என்று முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை பயன்படுத்தவில்லை என்று முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியது தவறானது கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, அதிமுகவிற்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் ஆகிய மூன்றும்தான் அதிமுகவின் ஓட்டு வங்கியை காப்பாற்றியுள்ளதாக கூறினார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைச் சொன்னால்தான் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுவார்கள் என்றும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பெயரை சொல்ல மறந்ததுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்றும் அன்வர் ராஜா கூறியிருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் கருத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ மறுப்பு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா படங்களைப் பெரிதாகவும், ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். படங்களை சிறிதாக வைத்துதான் பிரச்சாரம் செய்தோம் என்றார்.

சட்டசபை தேர்தலில் அதுமுகவின் தோல்வி எதிர்பாராதது என்று கூறிய அவர், இதற்கு தோழமை கட்சிகளும் காரணமல்ல என்றும், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா பெயரை பிரச்சாரத்தின்போது கூறவில்லை என்று அன்வர்ராஜா சொன்னது தவறான கருத்து என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.