மோசடி மன்னன் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது உறுதி – வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா
இந்தியாவில் பெரும் தொழிலதிபராக வலம் வந்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது உறுதி என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் ரூ.9 ,000 கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச்சென்றார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்து, அவரை இங்கிலாந்திலிருருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து அரசு, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை கைது செய்தது. மேலும், அவரை, இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், 2 நாள் பயணமாக இங்கிலாந்து சென்ற, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கபா, ”விஜய் மல்லையாவை நாடு கடத்துவது பற்றி இங்கிலாந்து தரப்பின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது செயல்பாட்டில் இருந்து வருகிறது.நாங்கள் சிறப்பாக வழக்குகளை நடத்தி வருகிறோம். மேலும் இங்கிலாந்திடம் இருந்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக உத்தரவாதம் வந்துள்ளது. அதனால், விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்படுவது உறுதி என கூறியுள்ளார்.
