வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டில் எம்.பி.க்கு 6 மாத சிறை… சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் தெலங்கானா ராஷ்ட்ரியா சமீதி கட்சியின் எம்.பி. மாலோத் கவிதாவிற்கு 6 மாத சிறை தண்டனை அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த மாலோத் கவிதா, கடந்த 2019 ஆம் ஆண்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மெஹபூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது மாலோத் கவிதாவுக்கு வாக்களிக்குமாறு அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அவரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, வாக்களிக்க பணம் அளிக்கப்பட்டது தொடர்பாக மாலோத் கவிதா மற்றும் அந்த தொண்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தலில் மாலோத் கவிதா வெற்றி பெற்றதையடுத்து, அந்த வழக்கு ஐதராபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மாலோத் கவிதா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு 6ல மாத சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மாலோத் கவிதா தெரிவித்துள்ளார்.
