கார் விபத்தில் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்… தோழி மரணம்…!
மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவருடன் இருந்த தோழி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் அதிவேகமாக வந்த கார், சாலை தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
விபத்தைக் கண்ட சக வாகன ஓட்டிகள், அவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்த பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த், அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை யாஷிகவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதா? என போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
