மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசி வழங்கும்போது திமுக மறைப்பது ஏன்?: தமிழக பாஜக தலைவர் கேள்வி…
மத்திய அரசு, தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கும்போது, அதை மறைத்து திமுக அரசியல் செய்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்மீகத்தை அடிப்படையாக வைத்து பாஜக இயங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். யாருமே அழைக்காமல் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வருகிறார்கள் என்றும், ஆன்மீகத்துடன் செல்ல வேடும என்பதற்காகவே கோயிலை புண்ணிய ஸ்தலமாக பார்ப்பதாகவும் கூறினார்.
கிரிவலம் மீதான தடையை தமிழக அரசு விரைவில் விலக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார் என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஈடு எதுவும் இல்லை என கூறினார். கொரோனா காலத்தில் உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை வழங்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது தமிழக அரசுக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த ஜூன் மாதம் தமிழகத்திற்கு 11 லட்சம் தடுப்பூசி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த மாதமும் கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும்போது அதை மறைத்து திமுக அரசியல் செய்வதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
