லாட்டரி சீட்டு திட்டத்தை கைவிட வேண்டும்… திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…
அரசுக்கு வழவாயை பெருக்கும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கொக்கரித்துவிட்டு, லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து ஏழை எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனை கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லாட்டரி மயக்கத்தால், ஏழை ஏளிய மக்கள் தங்கள் வாழ்வை இழந்ததாக குறிப்பிட்டுள்ளார். லாட்டரி மோகத்தால் பணம் இழந்த பல அப்பாவிகள், தற்கொலை செய்து கொண்ட அவலமும் நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
லாட்டரி கொள்ளையரின் பிடியில் இருந்து மக்களைக் காக்க முடிவு செய்யப்பட்டு அதன்படி, 2003 ஆம ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, லாட்டரி சீட்டு விற்பனை ஒழிக்கப்பட்டது. இதன் பெருமை அனைத்தும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையே சாரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டு அரக்கன் பிடியில் இருந்து தப்பிய ஏழை எளிய மக்கள், நல்வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள் என்றும், மக்களின் தலையில் மண்ணை வாரிக்கொட்ட சந்தர்ப்ப வசத்தால் பதவியில் அமர்ந்துள்ள திமுகவின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அரசுக்கு வருவாயை பெருக்கும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை கொண்டு வந்து சுடுகாடாக்க முடிவு செய்துள்ள கண்டிக்கத்தக்கது. ஆட்சியாளர்கள் ஆதாயம் பெருவதற்காக இந்த லாட்டரி சீட்டு திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அரசின் வருவாயைப் பெருக்க வேறு பல நல்ல வழிகளைத் தேட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற, மறைந்த ஜெயலலிதாவால் ஒழிக்கப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை மீண்டும் இந்த அரசு கொண்டு வந்தால் தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் சந்திக்க நேரிடும் என்றம், லாட்டரி சீட்டை மீண்டும கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என்றும் அதிமுக சார்பில் எச்சரிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


