பெகாசஸ் மூலம் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு புகார்…! உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கியுள்ள உளவு மென்பொருள் வழியாக இந்தியாவில் 40 பேரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. செல்போன்கள் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பெகாசஸ் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பெகாசஸ் மென்பொருள் மூலமாக சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது தொடர்பான புகாரை விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின்கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மனுவில் தெரிவித்துள்ளார்.
உளவு மென்பொருள் மூலம் யார் யாருடைய செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது… எந்த மாதிரியான தகவல்கள் திருடப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்தும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா? என விரிவாக விசாரிக்க வேண்டும் என்று எம்.எல்.சர்மா மனுவில் தெரிவித்துள்ளார்.
