அரசியல்தமிழ்நாடு

கொங்கு மண்டலம் முதல்வரின் கோட்டையாக மாறும்… திமுகவில் இணைந்த வ.து. நடராஜன் பேச்சு…

இனி கொங்கு மண்டலம் முதல்வரின் கோட்டையாக மாறும் என்று திமுகவில் இணைந்த வ.து.நடராஜன் கூறினார். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியைச் சேர்ந்தோர் இணையும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மாற்று கட்சியை சேர்ந்தோர் திமுகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதிமய்யம் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்டோர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்று கட்சியினரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில், கன்னியாகுமரி, தஞ்சை, ராமநாதபுரம், நாமக்கல் சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

திமுகவில் இணைந்தது குறித்து வ.து. நடராஜன், செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து அதிமுக, பாமக, அமமுக, பாஜகவில் இருந்து விலகி 2250 பேர் திமுகவில் தங்களை உறுப்பினராக சேர்த்து, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அதனை இன்று முதலமைச்சரிடம் அளித்ததாக கூறினார். கொங்கு மண்டலத்திற்கு ஒரு திருப்புமுனை என்றம் இது முதல் கட்டம்தான்…இது தொடரும் என்றார். இனி கொங்கு மண்டலம் முதலமைச்சரின் கோட்டையாகும் என்றார்.