தமிழ்நாடு

நள்ளிரவில் வாகன ஓட்டிகளுக்கு இலவச டீ, பிஸ்கெட்… விபத்தை தவிர்க்க காவல் உதவி ஆணையர் முயற்சி…

நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் காவல் உதவி ஆணையாளர் ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு தனது சொந்த செலாவில் டீ மற்றும் பிஸ்கெட் வழங்கி வருகிறார்.

சாலை மார்கமாக இரவில் நீண்ட நேரம் செல்லும் வாகனங்களால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. லாரி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள் தூக்க கலத்தில் ஏற்படுவதால் வாகனங்கள் விபத்துக்கு ஆளாகின்றன. இந்த நிலையில், தூக்க கலக்கத்தில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர்களுக்கு, காவல் உதவி ஆணையாளர் ஒருவர், நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தனது சொந்த செலவில் டீ மற்றும் பிஸ்கெட் வழங்கி வருகிறார்.

மதுரை தள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்த உதவி ஆணையரான சேகர் என்பவர், நள்ளிரவில் வாகன ஓட்டிகளுக்கு டீ பிஸ்கெட் வழங்கி வருகிறார். தான் இரவு பணியில் இருக்கும்போது, அந்த வழியாக வரும் கனரக வாகனங்கள், அரசு பேருந்துகளை நிறுத்தி, வாகன ஒட்டுனர்களை, முகம் கழுவச் செய்து அவர்களுக்கு டீ, பிஸ்கெட் வழங்கி வருகிறார்.

நள்ளிரவு பயணம் செய்யும் வாகன ஓட்டிகளிடம், தூக்கம் வந்தால் சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லும்படியும் காவல் உதவி ஆணையர் சேகர் அறிவுரை கூறி வருகிறார். இரவு பணிக்கு செல்லும்போது எல்லாம் உதவி ஆணையர் சேகர், இந்த பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவரது இந்த செயலுக்கு காவல் துறை அதிகாரிகளும், பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.