குற்றம்

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் தப்பியோட்டம்! கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்…

சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிப்பதற்காக சம்மன் கொடுக்க சென்றபோது, அவர்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு தப்பியோடியுள்ளது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பயந்து தப்பியோடிய அவர்களை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி காவல் துறை முடிவு செய்தது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களை விசாரிக்க, சிபிசிஐடி திட்டமிட்டு, அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்தது.

கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் வீடுகளுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் சென்றபோது, ஆசிரியைகள் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு தப்பியோடியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியைகள் வீட்டின் கதவுகளில் சிபிசிஐடி சம்மன் ஒட்டியுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து ஆசிரியைகள் தப்பியோடி தலைமறைவாகி உள்ளதால் அவர்கள் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.