இந்தியா

புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை..!விளக்கம் அளித்த தாலிபான் அமைப்பு…

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை படம்பிடிக்கச் சென்ற இந்தியாவின் புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டக் எனும் இடத்தில் அரசு படைகளுக்கும், தாலிபான்களுக்கும் இடையே நடக்கும் போர் நிகழ்வுகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்றிருந்த இந்தியாவை சேர்ந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் போராட்ட களத்தில் கொல்லப்பட்டார்.

புலிட்சர் விருது பெற்ற டேனிஷ் சித்திக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டேனிஷ் சித்திக்கின் உடல் ரெட் கிராஸ் அமைப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அவரது உடலை தாயகம் கொண்டு வருவதற்காக தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ. நா பாதுகாப்பு அவையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷிரிங்க்லா, ஆப்கானிஸ்தானில் பணி நிமித்தமாக சென்றிருந்த இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

டேனிஷ் சித்திக்கை தாங்கள் கொல்லவில்லை என தாலிபான் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித், யார் சுட்டதில் அவர் உயிரிழந்தார் என தெரியவில்லை என்றார். டேனிஷ் சித்திக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், போர்க் களத்திற்கு வரும் செய்தியாளர்கள், தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் இருப்பதும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்க காரணம் என்றும் கூறினார்.