இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்கள் கூடாது… தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்…
இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக கல்லேரி என்ற ஏரியை அரசே மணல் மூடி நிரப்புவதாகவும், ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல், ஏரியை மூடி அதன் மீது சாலை அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்டம், படூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிக்கவோ, அகற்றவோ கூடாது என்றார். மேலும் மணல் மூடி நிரப்புவதற்கு பதிலாக அந்த இடத்தில் உயர்மட்ட சாலையோ, மேம்பாலம் போன்று அமைத்து நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்தது என்ற குற்றச்சாட்டுக்கு அரசே ஆளாக கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும், இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை தள்ளி வைத்தார்.
