Uncategorized

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் திறக்க வேண்டும்… தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை…

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை என்றும், தனியார் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா காலகட்டத்தில் சூழ்நிலை காரணமாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டது என்றும், கிராமப்புற பகுதிகளில் சரியான முறையில் அவை சென்றடையவில்லை என்றார். கொரோனா காலகட்டத்தில் கடந்த ஒன்றரை காலம் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் எடுத்து வரும் நிலையில், 20 சதவிதம் மட்டுமே பயன்பெற்றதாக கூறினார்.

மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும் என்ற அவர், வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடம் மட்டுமே மாணவர்களுக்கு முழு அளவில் சென்றடையும் என்று கூறிய அவர், இது குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், முதலமைச்சருடன் கலந்து பேசி பின்பு தெரிவிப்பதாக இளங்கோ கூறினார். பள்ளிகல்வி துறை அமைச்சர், 9, 10, 11 ஆம் வகுப்புகள் முதலில் திறக்க ஆவண செய்வதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது, மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், ஷிப்ட் முறையில் பள்ளிகள் இயக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் டிசி இல்லாமல் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்றும் தனியா பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ கூறினார்.