சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்… விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் விவகாரம்…
சென்னை, கே.கே.நகரில் உள்ள பி.எஸ்.பி.பி. தனியார் பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். மாணவிகளிடம் அநாகரிகமாக கேள்விகள் கேட்டு தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவதும்,மாணவிகளின் உருவ தோற்றம் குறித்து கேலி செய்வதாகவும், மாணவிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து குறிப்பிட்ட ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் சிவசங்கர் பாபா போக்சோ வழக்கு பதியப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். தொடர்ந்து சென்னை காவல் நிலையத்தில் புகழ்பெற்ற தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு, அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் மற்றுமொரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் பெண்ணாத்தூர் சுப்ரமணிய ஐயர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 2004 – 2014 வரை 10 ஆண்டுகள் படித்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி, ஆசிரியர்களாக இருந்தசிவக்குமார், வெங்கட்ராமன், ஞானசேகரன் பல முறை தவறாக நடந்ததாக புகார் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை குறித்து,பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்துள்ளார்.
