தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் முதல்வரானதால் தீக்குளித்து வேண்டுதலை நிறைவேற்றிய நடத்துனர்…!

மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தீக்குளிப்பதாக வேண்டிக் கொண்ட திமுகவின் தீவிர தொண்டர் ஒருவர், உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக், லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன். தீவிர திமுக தொண்டரான இவர், அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள மணிமங்கலத்தில் உள்ள புதுகாளியம்மன் கோயில் வேண்டிக் கொண்டுள்ளார். இதேபோல் செந்தில்பாலாஜி வெற்றி பெற வேண்டும் என்றும் உலகநாதன் வேண்டிக் கொண்டுள்ளார். இவர்கள் வெற்றி பெற்றால் தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக புதுகாளியம்மன் கோயிலில், உலகநாதன் வேண்டிக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தேர்தலில் திமுக கூட்டணி அமொக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவும் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர். தனது வேண்டுதல் நிறைவேறிய நிலையில், தனது வேண்டுதலை நிறைவேற்றாமல் பொறுமை காத்து வந்த உலகநாதன். புதுகாளியம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றுவதாக கூறி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த லாலாப்பேட்டை போலீசார், உலகநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உலகநாதன் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். தீக்குளித்ததற்கான காரணம் தொடர்பாக உலகநாதன் இரண்டு பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் மூலமாக, உலகநாதன், இந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட உலகநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.