தமிழ்நாடு

விபத்தில் கால் எலும்பு முறிந்த இளைஞர்…! வேட்டியை கிழித்து முதலுதவி செய்த எம்.எல்.ஏ…

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு சட்டமன்ற உறுப்பினரும் டாக்டருமான லட்சுமணன் வேட்டியைக் கிழித்து கட்டுப்போட்டு முதலுதவி செய்துள்ளார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் தொகதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் லட்சுமணன், மனுக்களைப் பெறுவதற்காக காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். ராகவன்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற இளைஞர் விபத்தில் சிக்கி, காலில் முறிவு ஏற்பட்டு சாலையோரம் இருந்துள்ளார்.

அந்த வழியாக சென்ற சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், உடனடியாக காரை நிறுத்தி, விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி அளித்தார். இளைஞரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், கட்டுப்போட வேண்டியிருந்துள்ளது. காரில் இருந்த வேட்டியை எடுத்து வரச்சொன்ன லட்சுமணன், வேட்டியைக் கிழித்து இளைஞரின் காலில் கட்டுப்போட்டார். பின்னர் 108 ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதன் பிறகு, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தனது பணியை பார்க்க சென்றார். விபத்து ஏற்பட்டு அடிபட்டு கிடந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ. லட்சுமணனை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.