அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மீன்வளத்துறை, கால்நடைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைகளின் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு பாஜகவினர் இடையே ஏற்பட்டிருந்தன. அதற்கான பட்டியலில் தற்போதைய நிலவரப்படி, ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இருப்பதாகவும் அதில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது .

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக முன்னாள்
ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஐ.பி.எஸ்., திடீரென தனது பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாஜகவில் இணைந்தார்.பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் என்று பாஜகவில் சேர்ந்த பின்னர் அண்ணாமலை பேட்டியளித்த அடுத்த சில தினங்களிலேயே அவருக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .