7 ஆண்டுகளில் 7 கோடி சொத்து குவிப்பு… அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு…
ஏழு ஆண்டுகளில் சுமார் 7 கோடி ரூபாயை முறைகேடாக சொத்து குவித்த சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளளர் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட பாண்டியன் மற்றும் அவரது மனைவி லதா மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை, பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் பாண்டியன். பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு பாண்டியனின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு உள்பட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத பணம். 1.37 கோடி ரூபாய், 3 கோடி தங்கம், 7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாண்டியனின் உறவினர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதில் 10 மடங்க சொத்துக்கள் குவித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் துறை, பாண்டியனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக பாண்டியன் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாண்டியன் மீது, லஞ்ச ஒழிப்பு துறையினர் இரண்டாவது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் பாண்டியனின் மனைவி லதாவையும் இணைத்துள்ளனர். பாண்டியனுக்கு, 2013 ஆம் ஆண்டு வரை சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்ததாகவும், அதன் பிறகு 2020 ஆம் ஆண்டுக்குள் சுமார் 7.15 கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2013 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானம் மூலம 73 லட்சம் ரூபாய் வருவாய் வந்த நிலையில் செலவு செய்த தொகை ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் என இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை, சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
