Uncategorized

உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும்: கரு நாகராஜன்

ராதாகிருஷ்ணன் சுகாதார துறை செயலாளரா? அல்லது திமுக செயலாளரா? என பாஜக மாநில பொது செயலாளர் கரு நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழு கூட்டம், சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில பொது செயலாளர் கரு நாகராஜன், இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்று எதிராக செயற்குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்திய எம்.எல்.ஏ. ஈஸ்வரன் மற்றும் அதைக் கண்டுக்கொள்ளாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு தமிழக பாஜக பொது செயலாளர் கரு நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என்றார். மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அத்துறையின் செயலாளரா? அல்லது திமுக செயலாளரா? என தெரியவில்லை என்றார். நீட் குழுவுக்கு எதிராக வழக்கு தொடர மாணவராகவோ அல்லது பெற்றோராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். திமுகவின் கூட்டணி கட்சிகள் வழக்கில் தங்களைச் சேர்த்துக் கொள்ள கேட்டுள்ளது. நாளை நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதத்தை வலுவாக எடுத்துரைப்போம் என்று கரு நாகராஜன் தெரிவித்தார்.