ஒன்றிய அரசு என்றால் ஓபிஎஸ் ஏன் கதறுகிறார்? எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் கடும் காட்டம்…
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒன்றிய அரசு என்ற சொற்பதத்தை பயன்படுத்தி வருகிறது. இதற்கு பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவும் பாஜகவும் மத்திய அரசு என்பதே சரியென்றும், ஒன்றிய அரசு என்பதே அரசியலமைப்பு சட்டம் சொல்வதுபோல் மிக சரியானது என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கூறி வருகின்றனர்.
சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இது குறித்து கேள்வி எழுப்ப, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற அரசமைப்பு சட்டத்தின் முதல் வரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு என்ற சொல்லை கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் பயன்படுத்துகிறோம். அவ்வாறு கூறுவதை பார்த்து யாரும் மிரள தேவையில்லை. அதை சமூக குற்றமாக பார்க்கக் கூடாது என்றும் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்றிய அரசு என்று அழைக்கக் கூடாது என்றும், தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுவதாக கூறியிருந்தார். இந்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வது, தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலாகும் என்றம் கூறியிருந்தார். ஒன்றிய அரசு என கூறுவது நியாயம் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளார். Union Govt., என்று சட்டம் சொல்கிறது. Union Minister என்று அமித்ஷா பெயர் பலகையிலும் உள்ளது. அதையே தமிழில் ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர் என்கிறோம். இதற்கு ஏன் ஓபிஎஸ் கதறுகிறார்? என தனது டுவிட்டரில பதிவிட்டுள்ளார். மேலும், பாஜக சொல்கேட்டு அதிமுகவை பிளந்தவர், பிறரை பிரிவினைவாதி என்கிறார் என்றும் மகனை ஒன்றிய அமைச்சராக்க எதுவும் பேசுவார் என்றும் ஆளுர் ஷாநவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.
