குற்றம்

சென்னை ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் மாணவர் உடல் கண்டெடுப்பு… போலீசார் தீவிர விசாரணை…

சென்னை ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் மாணவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஐஐடி விடுதியில் மாணவர்கள் தங்கி ஆன்லைன் வழியே கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், நண்பர்களுடன் விளையாடுவதற்காக ஹாக்கி மைதானத்திற்கு பயிற்சியாளர் ராஜூ வந்துள்ளார். அப்போது அங்கு எரிந்த நிலையில் உடல் இருப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும் பெயர் உன்னிகிருஷ்ணன் (22) என்பதும் தெரியவந்தது. கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்த உன்னி கிருஷ்ணன், 2021 ஆம் ஆண்டு ஐஐடியில் பிராஜெக்ட் அசோசியேட் படிப்பில் சேர்ந்துள்ளார். இவரது தந்தை இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உன்னிகிருஷ்ணன் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த வீட்டில் இருந்து கைப்பற்றிய கடிதம் ஒன்றில், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக உன்னிகிருஷ்ணன் எழுதியிருந்ததாக, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.