ஜெ. மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை: 3 மாதங்களில் ஏன் தாக்கல் செய்ய உத்தரவிடக் கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய தமிழக அரசு, அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், விசாரணை முடிவடையாததால், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வழக்கறிஞர் தொண்டன் சுப்ரமணியன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 2017 ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டாலும், இதுவரை ஆணையம் சார்பில் இடைக்கால அறிக்கையும், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும், எனவே விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். மேலும், அறிக்கையைப் பெற தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் தொண்டன் சுப்ரமணியன் மனுவில் கூறியிருந்தார்.
அவரது மனு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் முடித்து அறிக்கை தாக்க செய்ய ஆணையத்திற்கு ஏன் உத்தரவிடக் கூடாது? என கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக 6 வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
