வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது… உச்சநீதிமன்றம் மறுப்பு…
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வன்னியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைளை, கடந்த அதிமுக அரசு நிறைவேற்றியது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என சட்டமன்றத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். உள் ஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு உள் ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும என்றும் அவர் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு, வன்னியர் சமுதாயத்திற்கு வழங்குவதற்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வன்னியர் சமுதாயத்திற்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார், சிவகங்கையைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நீதியரசருமான நாகமுத்து ஆஜரானார். அப்போது 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரம் முக்கியமானது என்றும் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் இதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ், 1994 ஆம் ஆண்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. அது தொடர்பான வழக்குகூட இத்தனை ஆண்டுகளாகியும், எந்தவொரு இறுத்யையும் எட்டவில்லை. இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவதால் என்ன பலன் ஏற்பட போகிறது என்றார். மேலும் நீங்கள் முதலில சென்னையை உயர்நீதிமன்றத்தை நாடி, அதன் பிறகு உச்சநீதிமன்றத்தை நாடுங்கள் என நீதிபதி கூறினார்.
அப்போது பேசிய வழக்கறிஞர் நாகமுத்து, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும், அதற்கு ஏற்கனவே தமிழக அரசு நோட்டீஸ் பிறப்பிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்றம், இந்த மனு மீதும் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும என்றும் நோட்டீஸ் அளித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
